Home Cinema 2டிசூர்யா பட நிறுவனம் தயாரித்த அருண்விஜய் மற்றும் அவரது மகன் நடித்த ’ஓ மை...

2டிசூர்யா பட நிறுவனம் தயாரித்த அருண்விஜய் மற்றும் அவரது மகன் நடித்த ’ஓ மை டாக்’ படத்தின் விமர்சனம் இதோ !!

9

விஜயக்குமார், அருண் விஜய், அர்னவ் விஜய் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருக்கும் ‘ஓ மை டாக்’ படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதி தங்களது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்கள். இன்று நேரடியாக அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு, என்று பார்ப்போம்.

கண் பார்வை இல்லாத நாய் குட்டி ஒன்று சகதியில் சிக்கி தவிக்க அதை காப்பாற்றி, அதற்கு சிம்பா என்று பெயர் வைத்து அர்ணவ் விஜய் வளர்க்கிறார். தனது நாய் குட்டிக்கு கண் பார்வை வர வேண்டும் என்று மருத்துவரை அணுகுகிறார். மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு 2 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என்றும் சொல்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து 2 லட்சம் ரூபாயை சேர்க்கும் முயற்சியில் அர்ணவ் விஜய் இறங்க, நாய்க்கு அறுவை சிகிச்சை நடந்து கண் பார்வையும் கிடைத்துவிடுகிறது.

கண் பார்வை பெற்ற சிம்பா, சர்வதேச அளவிலான நாய் கண்காட்சி மற்றும் போட்டியில் பங்கேற்க, முதல் போட்டியிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது. இதனால் கடுப்பாகும் வில்லன் வினய், எங்கே தன் நாய் போட்டியில் தோற்றுவிடுமோ, என்ற பயத்தில் அர்ணவின் சிம்பாவை விலை பேசுகிறார். அதற்கு அர்ணவ் மற்றும் அருண் விஜய் சம்மதிக்காததால், வினயின் சதி திட்டத்தால் சிம்பாவுக்கு மீண்டும் கண் பார்வை பறிபோய் விடுகிறது. கண் பார்வையை இழந்த சிம்பாவை இறுதிப் போட்டியில் பங்கேற்க கூடாது, என்று நடுவர்கள் சொல்லி விடுகிறார்கள். இறுதியில் சிம்பா போட்டியில் பங்கேற்றதா இல்லையா, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

மிக எளிமையான கதையாக இருந்தாலும், ”முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” என்ற வலிமையான கருத்தை மிக அழுத்தமாக திரைக்கதை சொல்கிறது.

அருண் விஜய், அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார், விஜயகுமார், வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வினய் என அனைவரும் கொடுத்த வேடத்தில் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள அர்ணவ் விஜய், பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். அவரது துள்ளலான நடிப்பும், குறும்புத்தனமானப் பேச்சும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. ஒரு சில இடங்களில் முதல் படத்தின் தடுமாற்றம் தெரிந்தாலும் அடுத்தடுத்த படங்களில் அது சரியாகிவிடும் என நம்பலாம். நட்சத்திரங்களுடன் சிம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஹஸ்கி நாயும் ரொம்ப கியூட்டாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. கோபிநாத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருந்தாலும், ஊட்டியின் அழகை முழுமையாக காட்டாதது போல் இருக்கிறது.

Home Alone, Babies Day Out போன்ற ஹாலிவுட் படங்களின் பாதிப்பு போல் காட்சிகளும், திரைக்கதை அமைப்பும் இருந்தாலும் இயக்குநர் சரவ் சண்முகம், நம்மை எதிரியாக நினைப்பவர்களிடம் கூட நாம் அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டும், என்ற குழந்தைகளுக்கான நல்ல கருத்தை படத்தில் சொல்லியிருக்கிறார்.

கண் தெரியாத நாய் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெருகிறது, என்பது நம்ப முடியாதது போல் இருந்தாலும், கண் தெரியாத அந்த நாய் எப்படி தனது இலக்கை அடைகிறது, என்பதை காட்சிப்படுத்திய விதம், சிம்பாவுக்கும், அர்ணவுக்கும் இடையே இருக்கும் பாசத்தை க்ளைமாக்ஸ் காட்சியில் ஒன்றினைத்த விதம் அனைத்தும் படத்திற்கு பெரிய பிளஸ்..

நல்ல கதைக்களம் தான், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மிக சிறப்பான படமாகவும், சிம்பா அனைவரது மனதிலும் நீங்கா இடமும் பிடித்திருக்கும். இருந்தாலும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை படம் வெகுவாக கவரும்.

மொத்தத்தில், ‘ஓ மை டாக்’ க்யூட்டான, குழந்தைகளுக்கான படம். ரேட்டிங் 3/5