வீடு அல்லது வீடமைப்பதற்கு காணி இல்லாத, வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு வசதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வீடு அல்லது வீடமைப்பதற்கு காணி இல்லாமையால் வாடகை வீடுகளில் வாழ்கின்ற, உண்மையான வீட்டுத் தேவையுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நியாய விலைக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் ‘சொந்துரு மஹல்’ எனும் பெயரிலான வீடமைப்புத்திட்டத்தை தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 5,00,000 ரூபாவை ஆரம்பத் தொகையாகச் செலுத்துவதற்கான ஆற்றல் இருக்க வேண்டியதுடன், வீட்டுப் பெறுமதியின் எஞ்சிய தொகை வருடம் ஒன்றில் தவணைக் கட்டணமாக அறவிடப்படும். தேவைக்கேற்ப வங்கியின் மூலம் கடனைப் பெற்றுக்கொள்வதற்கும், தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன்பொக்குனகமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.