இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை யில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்டத்திருவிழா’ நடைபெறுவது வழக்கம். பட்டங்கள் பட்டம் பட்டத்
பட்டம் விடுவது என்பது நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும். பலவிதமான வண்ணங்களில் பட்டம் செய்து அதை பறக்க விடும் பொழுது நாமே பறப்பது போன்ற பரவசமும், மகிழ்ச்சியும் ஏற்படும். வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ராட்சத பட்டத் திருவிழா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பட்டம் ஏற்றுவதற்கு காற்றின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. ஆந்தவகையில் வாடைககாற்று ஜப்பசி மாதத்திற்கு பிறகு ஆரம்பித்தாலும் கூட அக்காலப்பகுதி மழை என்பதனால் பட்டம் ஏற்றுவதற்கு பொருத்தமான காலமாக இருக்காது.
இதனால் வாடைக்காற்றின் இறுதிக்காலமான தைமாதத்தினையும் விசேட தினமாக தைப்பொங்கலையும் பட்டப் போட்டி நடாத்துவதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று திரு.கனகசபாபதிப்பிள்ளை( கவிஞர் ஜயா) கூறுகின்றார்.
ஏந்தவொரு கலைக்குமே போட்டி என்று ஒன்று இருக்கும். அப்போதுதான் அந்தக் கலை இன்னுமே வளர்ச்சியடையும்.
அந்தவகையில் ஆரம்ப காலத்தில் (2000 ஆண்டுகளுக்கு முன்பு) ஒழுங்கமைக்கபட்டு நிறுவன ரீதியில் பட்டப்போட்டி நடாத்தப்படா விட்டாலும் கூட சிறியளவில் இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் நடாத்தப்பட்டு வந்தது.
தொடர்ந்து வல்வை சனசமூக சேவா நிலையம் என்ற ஓர் அமைப்பே இதனை ஒழுங்குபடுத்தி ஒரு நிகழ்வாக நடாத்தி வந்தது. இது ஆரம்பத்தில் ரேவடி கடற்கரையிலேயே நடாத்தப்பட்டது.
இந்த அமைப்பினால் 1995ம் ஆண்டு தான் இறுதியாக இந்த பட்டப்போட்டி நடாத்தப்பட்டது. 1995ம் ஆண்டுகளுக்கு பின்னர் யுத்த காலங்கள், அவை தந்த இடப்பெயர்வுகள் போன்ற காரணங்களினால் இப்போட்டியை தொடர்ந்து நடாத்த முடியாத சூழல் உருவாகியது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் பட்டப் போட்டி 2011ம் ஆண்டு ஆரம்பமானது. வல்வையின் பட்டம் கட்டும் கலை அழிந்து விடக் கூடாது என்றும், அதனை வித்தியாசமாக கண்ணோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்று உழைத்தவர்கள் பலர் உள்ளனர்.
இன்றைய நிலையில் விக்னேஷ்வரா சனசமூக சேவா நிலையமும், உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து உதய சூரியன் உல்லாசக் கடற்கரையில் இப்பட்டத திருவிழாவினை நடாத்தி வருகின்றார்கள்.
ஆரம்பகாலத்தில் ஒருசில பட்டங்களே அறிமுகமாகவிருந்தன. வெளவால், கொக்கு, பராந்து, கட்டுக்கொடி, பெட்டிப் பட்டம், போன்றவைகள் அவற்றுள் சில. பட்டம் கட்டும் கலையின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக “விண்” எனப்படும் ஒலி எழுப்பும் ஒரு நுட்பமும் பயன்படுத்தப்பட்டது.
இந்த “விண்” ஆரம்பத்தில் பச்சை பனம்மட்டையின் நாரினால் உடைந்த கண்ணாடி மற்றும் பாதத்தினையும் பயன்படுத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து முப்பரிமாண வடிவங்களில் பட்டங்கள் அறிமுகமாகின.
பின்னர் பட்டப்போட்டியின் வளர்சியிப் படியின் இன்னொரு கட்டமாக “ லைற் பட்டங்கள்” வானில் பறக்க தொடங்கின. புட்டங்களில் பல வர்ண மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு பட்டங்கள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். பட்டத்தினையும் பட்டமேற்றும் இடத்தினையும் இணைக்கும் நூல் வழியாக வயர் பொருத்தப்பட்டு இருக்கும்.
இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.
ஆண்டுதோறும் பட்டத் திருவிழாவில் பார்வையாளர்களின் கண்ணைக்கவரும் விதமாக முப்பரிமான தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்படும்
வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடாத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் தற்போது பட்ட சீசன் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் தை மாத இறுதி வரையில் நீடிக்கும்.
பட்டங்கள் சாதாரணமாக சாணை (சாணான்) படலம் எட்டுமூலை முதற் கொண்டு கொக்கு பிராந்தன் (பருந்து) பெட்டிப் பட்டம் என பல வகை பட்டங்களை ஏற்றுவார்கள்.
அதிலும் குறிப்பாக படல பட்டங்களை சுமார் 20அடி உயரமாகக் கூட காட்டுவார்கள். ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 10பட்டங்கள் வரை இணைத்தும் ஏற்றுவார்கள்.
இந்த பட்டங்களுக்கு ‘விண்'(மூங்கில் அல்லது கமுகம் தடியை சிறிதாக சீவி எடுத்து அதனை வளைத்து ரிபன் கட்டி பட்டத்தில் கட்டி விடுவார்கள்.
அது காற்றில் சத்தம் எழுப்பும்) கட்டியும் சிறிய மின் குமிழ்களையும் கட்டி ஏற்றியும் விடுவார்கள். இரவில் ‘விண்’ சத்தத்துடன் மின்னொளியில் பட்டங்கள் வானை அலங்கரிக்கும்.பட்டம் கட்டும் கலை.
இந்த பட்டங்களை கட்டுவதற்கு தென்னோலை ஈர்க்கு மூங்கில் கமுகு (பாக்கு மரம்) உள்ளிட்டவற்றை பயன்படுத்துவார்கள். அதேபோன்று பட்டத்தினை ஏற்றுவதற்கு பட்டத்தின் அளவை பொறுத்து தையல் நூல் தங்கூசி நூல் நைலோன் நூல் நைலோன் கயிறு என பயன்படுத்துவார்கள்.
பட்டம் கட்டுவது என்பது ஒரு கலை. அதனை எல்லோராலும் இலகுவாக கட்டிவிட முடியாது. அது மிகவும் நுட்பமான வேலை. அதற்கு அளவு பிரமாணங்கள் துல்லியமாக இருக்க வேண்டும்.
சாதாரணமாக இரு பரிமாண பட்டங்கள் கட்டும் போது அவற்றின் அளவு பிரமாணங்கள் முதல் கொண்டு பட்டத்திற்கு மூச்சி கட்டுவது (பட்டம் ஏற்றும் நூலை பட்டத்துடன் இணைத்து கட்டும் இடம்) வரை நுட்பமான வேலைகள்.
இரு பரிமாண பட்டங்களுக்கே எவ்வளவோ நுட்பங்கள் இருக்கும் போது முப்பரிமாண பட்டங்களுக்கு எவ்வளவு நுட்பமும் திறனும் தேவையாக இருக்கும்! வடமராட்சியில் வல்வெட்டித்துறை பகுதியில் முப்பரிமாண பட்டங்களை செய்யக்கூடிய திறமையானவர்கள் சுமார் 25பேருக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
அவர்களில் பலர் பரம்பரை பரம்பரையாக பட்டம் கட்டி வருபவர்கள். முப்பரிமாண பட்டம் கட்டும் போது பல நுணுக்கங்கள் உண்டு.
அது மாத்திரமின்றி தொழிநுட்ப நுணுக்கங்களும் உண்டு பட்டங்கள் காற்றை உள்வாங்கி வெளியேற்றுமாறு கட்டப்பட வேண்டும்.
பட்டம் கட்டுவதனை அவர்கள் தொழிலாக செய்வதில்லை. போட்டிகளுக்காக மாத்திரம் பட்டம் கட்டி போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்களை தட்டிச்செல்வதுடன் சரி அதனை விற்பனைக்காகவோ அல்லது தொழிலாகவோ அவர்கள் செய்வதில்லை ,
இளைஞர்கள் மத்தியில் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா மிகப்பிரபல்யமான ஒன்றாகும்.
பல இளைஞர்கள் ஆண்டுதோறும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது பட்டத் திறமைகளை வெளிக்காட்டுவர்.
ஜந்து வருடங்களாக தொடர்ந்து பட்டத்திருவிழாவில் தமது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து முதலிடம் தக்கவைக்கப்பட்டும் உள்ளது .
அந்த அளவிற்கு பட்டத்திருவிழா தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதாக இன்றும் நிலைபெற்று வருகின்றது.
போட்டியில் வெல்பவர்களுக்கு பணப்பரிசில்களும் தங்க நாணயமும் வழங்கப்படுவது வழமை.
தமது ராட்சத பட்டங்களுக்கு தாமே பெயரினை சூட்டி அழகு பார்ப்பதுடன் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சொற்கள், வாக்கியங்கள் முதலியவற்றையும் விண் அறிய பறக்கவிடுவது வழமையாகும்
அத்தோடு தமிழ் மக்களின் கலை, கலாசாரம் மற்றும் பண்பாடு நாகரிகம் முதலியவற்றை வெளி உலகிற்குத் பறைசாற்றும் வகையில் பட்டங்களின் வடிவம் உருவாக்கி கொள்வது வழமையாகும்
அத்துடன் விழிப்புணர்வு தொடர்பாகவும் சமூக நலன் அக்கறை தொடர்பாகவும் பட்டங்கள் உருவாக்கி கொள்வதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
போட்டிக்காக உருவாக்கப்படும் பட்டங்கள் அனைத்தும் கைகளால் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
பெரும் ஏற்பாட்டில் நடைபெறும் பட்டத் திருவிழாவுக்கு யாழின் பல பக்கங்களில் இருந்து மாத்திரமல்ல யாழ். மாவட்டம் தவிர ஏனைய பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பட்டத் திருவிழாவில் ஏற்றப்படும் கண்களை கவரும் இராட்சத பட்டங்களை கண்டு களிப்பார்கள்.
பட்டத் திருவிழாவினை காண யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் ஆண்டு தோறும் பெருமளவிலான மக்கள் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஒன்றுகூடுவார்கள்.
நடத்தப்பட்டு வரும், பட்டத்திருவிழாவை, இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து, அரச விழாவாக, இம்முறை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாரம்பரிய பட்டத் திருவிழாவை, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்லப்பட்டமைக்கு, வல்வெட்டித்துறையை சேர்ந்த பொதுமக்களும், புலம்பெயர் வல்வை அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை பலர் வன்மையாக கண்டித்தனர்,
குறித்த பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்குள்ள பெருமையுடன் நடைபெற வேண்டும் என்பதே எமது மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பு.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எழுத்து மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினரை
பிரதம விருந்தினராக அழைத்து இந்த பட்டத் திருவிழா நடத்துவது 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச அரங்கிலிருந்து இல்லாது செய்வதற்குரிய அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கையே இது.
நீண்ட காலமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் முயற்சி வீண் போகும் வகையில் இந்த செயல்பாடு சர்வதேசத்தின் உடைய பார்வை இனப்படுகொலை புரிந்தவர்களை அழைத்து இந்த பட்டத்திருவிழாவை நடாத்துவதானது சர்வதேச அரங்கிலிருந்து இலங்கை அரசாங்கத்தை தப்பிப்பதற்கு உரிய சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்கும்.
ஆகவே ஏற்பாட்டாளர்கள் இதை கவனத்தில் கொண்டு பட்டத்திருவிழா அரசியல் கலப்படமற்ற வகையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு .
உடனடியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த புதிய நடைமுறையை கைவிட்டு இந்த மண்ணில் கால காலமாக நடைபெற்று வரும் பட்டத் திருவிழா போன்று இம்முறையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
ஆனாலும் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டு குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் போது பட்டத்திருவிழா நிறுத்தப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அது அனைத்து மக்களுக்கும் சோகத்தினை ஏற்படுத்திய விடயமாகும். இருப்பினும் எமது மக்களின் பாரம்பரிய, எந்தக் காரணத்தை கொண்டும் சிதைந்து போவதற்கு இடமளிக்க முடியாது.
S. Sooriyapathy
Department of media Media studies
University of Jaffna