Home cinema news நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல்: விசாரித்த பொலிஸ்காரரின் கையை வெட்ட திட்டமிட்ட நடிகர்...

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல்: விசாரித்த பொலிஸ்காரரின் கையை வெட்ட திட்டமிட்ட நடிகர் திலீப்; புதிய திடுக்கிடும் தகவல்கள்!

11

நடிகை பாவனாவை 2017ஆம் ஆண்டு காரில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த வழக்கிலிருந்து நடிகர் திலீப் தப்பிப்பார் போல தோன்றினாலும், அண்மை நாட்களாக ஏற்பட்ட அதிரடி திருப்பங்களுடன், அவரது கழுத்தைச் சுற்றி கயிறு இறுகியுள்ளதாக தோன்றுகிறது.

வழக்கின் ஆரம்பத்தில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 74 நாள்கள் சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் நடிகர் திலீப்பின் நண்பராக இருந்தவரும், இயக்குநருமான பாலசந்திரகுமார் கடந்த மாதம் இறுதியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது திலீப் குறித்த சில தகவல்களை வெளியிட்டார்.

அதில், ”நடிகையைக் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இப்போது சிறையிலிருக்கும் பல்சர் சுனிக்கும், நடிகர் திலீப்புக்கும் ஏற்கெனவே நட்பு இருந்தது. நடிகர் திலீப்புடன் பல்சர் சுனியை நான் பார்த்திருக்கிறேன். அந்த நட்பு குறித்து வெளியே கூறினால் ஜாமீன் கிடைக்காது என்பதால், அது பற்றி வெளியே கூறக் கூடாது என திலீப் என்னிடம் கேட்டுக்கொண்டார். நடிகைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை திலீப் பார்த்தார்” என வெளிப்படுத்தினார் இயக்குநர் பாலசந்திரகுமார்.

மேலும், நடிகர் திலீப் தன்னைக் கைதுசெய்த போலீஸ் அதிகாரிகளைப் பழிவாங்குவது பற்றி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் திலீப் குறித்த விவரங்களை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன் எனவும், திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியதாகவும் பாலசந்திரகுமார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை பாவனா முதல்வருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் திலீபிடம் மீண்டும் விசாரணை நடத்தி அது குறித்த அறிக்கையை வரும் 20ஆம் திகதிக்கு முன்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க க்ரைம் பிராஞ்ச் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

வரும் புதன்கிழமை இயக்குநர் பாலசந்திரகுமாரின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்ய க்ரைம் பிராஞ்ச் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே நடிகர் திலீப் மீது க்ரைம் பிராஞ்ச் போலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர். தான் கைதுசெய்யப்பட்ட கோபத்தில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரிக்கு ஆபத்தை ஏற்படுத்த திலீப் உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் ஸ்டேஷனின் 6/2022 என்ற எஃப்.ஐ.ஆர் நம்பரில் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி செக்‌ஷன் 116, 118, 120 பி, 506, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு, நவம்பர் 15 ஆம் தேதி இரவு 10:30-க்கும் 12:30-க்கும் இடைப்பட்ட சமயத்தில் ஆலுவா கொட்டாரக்கடவில் உள்ள திலீப்பின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்திருப்பதாகவும், அதில் முதல் குற்றவாளியாக கோபால கிருஷ்ணன் என்ற திலீப், இரண்டாம் குற்றவாளியாக திலீப்பின் சகோதரன் அனூப், திலீப் மனைவியின் சகோதரன் சூரஜ் மூன்றாம் குற்றவாளி, அப்பு, பாபு செங்கமனாடு மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் எட்டாம் பிரதியாக திலீப் சேர்க்கப்பட்டு கைதுசெய்த விசாரணை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும் என இவர்கள் ஆலோசனை நடத்தியதாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

”2017ஆம் ஆண்டின் கொச்சி காவல் ஆணையாளரை நோக்கி, திலீப் விரலை நீட்டிப் பேசினார். ஜார்ஜ், சோஜன், சுதர்சன், சந்தியா, பைஜூ, பவுலோஸ் ஆகியோர் பாதிக்கப்படப் போகிறீர்கள். அதிலும், என்னைக் காயப்படுத்திய சுதர்சன் கையை நான் வெட்டாமல் விடமாட்டேன் என்றார்.

பாலியல் கொடுமை வழக்கில் பிணையில் வெளியே வந்த ஒரு மாதத்தில், எர்ணாகுளம், ஆலுவாவிலுள்ள திலீப் வீட்டில், பொலிஸ்காரர்களை கொல்ல சதி நடந்தது. பாலச்சந்திரகுமார் இவற்றை நேரில் பார்த்தவர்” என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பாலசந்திர குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் வெளியிட்ட ஆடியோவின் அடிப்படையிலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சமீபத்தில் சிறையில் இருந்த பல்சர் சுனியின் தொலைபேசி உரையாடல் வெளியானதை அடுத்து நடிகர் திலீப் மேலும் சிக்கலில் சிக்கியுள்ளார்.

பல்சர் சுனி மற்றும் சாட்சி ஜின்சன் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. பல்சர் சுனி, திலீப் வீட்டிலும், அவரது ஹோட்டலிலும் பாலச்சந்திர குமாரை பார்த்தது தொலைபேசி உரையாடலில் தெரியவந்துள்ளது.

சிறையிலிருந்து பல்சர் சுனி தனது முன்னாள் கைதி ஜின்சனுக்கு போன் செய்ததாக தெரிகிறது. திலீப் மீது பாலச்சந்திர குமார் புதிய குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.

தொலைபேசி உரையாடலின் போது, ​​பல்சர் சுனி, திலீப் வீட்டிலும், பல படப்பிடிப்பு இடங்களிலும் பாலச்சந்திர குமாரை பார்த்ததாக ஜின்சனிடம் கூறியுள்ளார்.