Home Local news தீவிரமடையும் ஆர்ப்பாட்டக்களம்: பெரும் பதற்றத்தில் கொழும்பின் முக்கிய வீதிகள்!

தீவிரமடையும் ஆர்ப்பாட்டக்களம்: பெரும் பதற்றத்தில் கொழும்பின் முக்கிய வீதிகள்!

18

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ள நிலையில், முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பொலிஸார் கொழும்பின் முக்கிய பல வீதிகளில் வீதித்தடைகளை அமைத்துள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி அருகில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து பேரணியாக சென்று கொண்டுள்ளனர்.

அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து காலி முகத்திடலை நோக்கி பேரணியாக செல்லும் வழியில் லோட்டஸ் வீதிக்கருகே போடப்பட்டிருக்கும் வீதித் தடைக்கருகில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அந்த பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.