Home Local news இடமாற்றக் குழறுபடியால் கைநழுவிப்போகும் அபாயத்தில் இருதயசிகிச்சைப் பிரிவு

இடமாற்றக் குழறுபடியால் கைநழுவிப்போகும் அபாயத்தில் இருதயசிகிச்சைப் பிரிவு

16

நீண்ட காலத்திற்குப் பின் திருகோணமலை ( வைத்தியசாலை ) மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக ஜப்பான் அரசின் நிதியில் ஜய்கா ( JICA) திட்டமாக 220 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் இதயம் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் அதிநவீன வசதிகொண்ட cardiology unit திட்டம்.

2017 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் ஜய்கா நிறுவனத்திற்கும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜப்பான் பாராளுமன்றத்தில் 2019 ஆண்டு நிதிவழங்குவதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டதாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

2019 இல் ஆரம்பித்து 2024 திட்டம் முடிவடையும் என்பதே காலவரையறை, கொவிட் இடர் காரணமாக இது மேலும் 2 வருடங்கள் நீடிக்கப்பட்ட்டுள்ளது.

இலங்கையில் திருகோணமலை, அனுராதபுரம், குருனாகல், பதுளை, கண்டி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாவட்டத்தின் தேவை, மக்கள் தொகை என்பனவற்றுக்கு ஏற்ப சில வேறுபாடுகளுடன் இந்தத் திட்டம் ஆரம்பித்து பதுளை, கண்டி ஆகிய இடங்களில் கட்டிட வேலை தொடங்கிய நிலையில் திருகோணமலை உட்பட ஏனைய இரு இடங்களிலும் இந்த மாதம் கட்டிடவேலைக்கான ஒப்பந்தம் கோர திட்டமிடப்பட்டிருந்தது.

பாரிய இந்தத் திட்டதின் கட்டிட வேலைக்கு முன்னரான அனுமதிகள், சோதனைகள், களஆய்வுகள் அனைத்தும் 100 வீதம் நிறைவுற்றுள்ள நிலையில் இதனை பிறிதொரு இடத்திற்கு மாற்றும் திட்டத்தை கடந்த 27.12.2021 சுகாதார அமைச்சில் கூடித் தீர்மானித்துள்ளனர்.

அதன் நிமித்தம் இது மாற்றப்பட மூன்று இடங்களான சர்தாபுர, கன்னியா, இலுப்பங்குளம் என்பன பிரேரிக்கப்பட நிலையில் சர்தாபுரவில் நிலம் பெறுவதில் இருக்கும் இடர்பாடு மற்றும் பொருத்தப்பாடு, ஒருசார்ரின் எதிர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் இறுதியாக பெரியகுளம் பகுதியில் 25 ஏக்கர் பொருத்தமான இடம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது வைத்திய சாலைக்குப் பொருத்தமான இடமாயினும் இன்றைய நிலையில் இதன் சாத்தியவளம் என்ன என்பதே கேள்வி.

எதிர்கால நகர அபிவிருத்தி, போதனா வைத்தியசாலையாக விஸ்தரிப்பு என்பனவற்றுக்கு தற்போது திருகோணமலைப் பொது வைத்தியசாலை ஒரு பொருத்தமான இடம் இல்லை என்பதில் சில உண்மைகள் இருந்தாலும், மாற்று வழிகளுடன் சீர்செய்யக் கூடியவை என்பதையும் மறுக்க முடியாது.

உடனடியாக நடைபெறாத திட்டமொன்றுக்காக, நீண்டகாலத்திலெனின் என்ன கால எல்லையில் சாத்தியம் என எவராலும உறுதிப்படுத்தாத வெறும் ஊகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு; கைக்கு வந்த விடயத்தை நழுவவிடும் வகையில் இந்த விடயம் கையாளப்படுவதாக இருக்கின்றது.

அரச தரப்பால், திடீரென இடமாற்றத்திறகுச் சொல்லும் காரணங்கள்.

1. குறித்த இடத்தின் மண் பரிசோதனை 8 மாடிக் கட்டிடம் கட்டப் பொருத்தமற்றது.

2. கடலோரம் என்பதால் துருப்பிடித்து இயந்திரங்கள் பழுதடையும்.

3. கடலோரம் என்பதால் சுனாமி அச்சுறுத்தல் உள்ளது.

4. வைத்தியசாலைக் கழிவுகள் கடலில் கலக்கவிடுவதால் கடல் மாசடைகின்றது.

5. வைத்தியசாலையில் போதிய இடவசதி இல்லாமையினால் மேலதிக அபிவிருத்தி செய்ய முடியாது.

6. எதிர்காலத் திட்டமான மெற்றோசிற்றியில் இந்த வைத்தியசாலை இடம்பெயரும், எனவே அதை இப்போதே செய்திடலாம்.

7. கட்டப்படும் இதயசிகிச்சைத் தொகுதியை கொண்டு சென்றால் பின் ஏனையவற்றையும் கொண்டு செல்லலாம்.

இவை அனைத்தும் வெறும்நொண்டிச் சாட்டுகளும், அர்த்தமற்றவை என்பதயும் விளங்கிக்கொள்ள அவ்வளவு பெரிய அறிவொன்றும் தேவையில்லை.

1. குறித்த இடத்தின் மண் பரிசோதனை 8 மாடிக் கட்டிடம் கட்டப் பொருத்தமற்றது.

இதுதான் திருகோணமலையின் சுகாதாரத் துறைசார்ந்தோர் மற்றும் சில புத்திஜீவிகள் இந்த கட்டிடத்தை மாற்ற வேண்டும் என வாதிடுவதற்கான காரணம்.

ஆனால் இது அப்பட்டமான பொய். ஜப்பான் நிறுவனம் மண் தொடர்பாக எந்தக் குறைபாட்டையும் கூறவில்லை.

மறுப்போர் இந்த மண்பரிசோதனை ஆய்வறிக்கையினை பார்த்தீர்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். அவ்வாறு ஒரு குறைபாடு இருந்திருந்தால் நிச்சயம் அதனை ஜய்க்கா மேற்கொண்டிருக்காது. எனவே மண் தொடர்பான குற்றச்சாட்டு வலிதற்றது.

1. கடலோரம் என்பதால் துருப்பிடித்து இயந்திரங்கள் பழுதடையும்.

150 வருடங்களுக்கு மேல் இந்த வைத்தியசாலை இயங்குகின்றது, இக்காரணத்தைக் கூறி இது மாற்றப்பட வேண்டுமெனனின் ஆகக் குறைந்தது 20 வருடத்திற்கு முன் புதிய கட்டத் தொகுதி கட்டும் போது மாற்றத்தைச் செய்திருக்கலாம்,

ஆனால் செய்யப்படவில்லை. அத்துடன் தற்போது வைத்தியசாலையில் பயன்படுத்தும் பெரும்பாலாக கருவிகள் சீனத் தயாரிப்புகள்; அவையே தாக்குப் பிடிக்கும் போது புதிய தொகுதியில் முழுமையான ஜப்பான் உபகரணங்களே இருக்கப்போகின்றது.

அத்துடன் திட்டத்தை ஆரம்பித்த ஜப்பானுக்கு மட்டும் இது தெரியாத விடயமா என்ன? ஆக இதுவும் ஒரு நொண்டிச் சாட்டு.

2. கடலோரம் என்பதால் சுனாமி அச்சுறுத்தல் உள்ளது.

இதுதான் இக்குறைபாடுகளில் மிகப் பெரிய கண்டுபிடிப்பும் நகைச்வுவையும்.. உண்மையில் சுனாமி தாக்கத்தரிற்குப் பின்தான் வைத்தியசாலையில் பாரிய அபிவிருத்திகள் செய்யப்பட்டது.

எனின் ஏன் கடந்த 15 வருடமாக இவ்விடயம் முன்வைக்கப்பட்டு வைத்தியசாலை மாற்றப்பட எத்தனிக்கவில்லை, தற்போது அடையாளம் கண்ட நிலம் இப்பொழுதான் தோன்றியதா? ஜப்பான் நாட்டவருக்குச் சுனாமி பற்றித் தெரியாதா ? எனவே இந்தச் சுனாமி அச்சுறுத்தல் எவ்வளவபெரிய சாட்டு.

3. வைத்தியசாலைக் கழிவுகள் கடலில் கலக்கவிடுவதால் கடல் மாசடைகின்றது.

கடலுக்குள் எந்தக் கழிவையும் விடக்கூடாது என்பது பொதுவிதி. அவ்வாறிருக்க ஏன் இவ்வளவு நாளும் கழிவைக் கடலில் விட்டார்கள்? ஏன் இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை.

மலை நாட்டில் உள்ள வைத்தியசாலைகள் எவ்வாறு கழிவை அகற்றுகின்றன. புதிய இடத்தில் எவ்வாறு கழிவகற்றுவது? ஆக முறையான கழிவகற்றைலை ஏற்படுத்துவதே தீர்வு அன்றி, கடலோரத்தில் இருந்து வைத்தியசாலையை மாற்றுவதல்ல. ஆக இதுவும் உலகமா ஏமாற்றாகவே இருக்கின்றது.

4. வைத்தியசாலையில் போதிய இடவசதி இல்லாமையினால் மேலதிக அபிவிருத்தி செய்ய முடியாது.

இடவசதி பற்றாக்குறை என்பதை மறுக்க முடியாது. இருந்தும் தற்போது வைத்தியசாலைக்குச் சொந்தமாக 23.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதே வேளை கொழும்பு தேசிய வைத்தியசாலை 50 ஏக்கர் நிலத்திலும், கண்டி தேசிய வைத்தியசாலை அண்ணளவாக 53 ஏக்கர் நிலத்திலும் இருக்கின்றது.

கொழும்பு, கண்டி எனும் வைத்தியசாலைகளில் பயனாளிகள், சனத்தொகையுடன் ஒப்பிடும் போது இந்த 23.5 ஏக்கர் நிலம் போதுமானதே. அத்துடன் அபிவிருத்தி எனும்போது பல நூறு ஏக்கர் நிலத்தில் கட்டிடம் கட்டுவதல்ல. முறையான திட்டமிடலில் இருக்கும் நிலமே மிகத் தாராளமானது என்பது தெள்ளத் தெளிவாகின்றது.

5. எதிர்காலத் திட்டமான மெற்றோசிற்றியில் இந்த வைத்தியசாலை இடம் பெயரும், எனவே அதை இப்போதே செய்திடலாம்.

உண்மைதான், ஆனால் மெற்றோசிற்த் திட்டம் 27.12.2021 திகதியிலா சுகாதார அமைச்சு அறிந்தது? அல்லது அது 2019 இற்குப் பின் பேசப்பட்டதா? இந்தத் திட்டம் இருப்பது ஜப்பானுக்குத் தெரியாதா?

2019 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கிய போது தெரியதா மொற்றோசிற்றி பற்றி 2021 ஆம் ஆண்டில் தெரியவந்தது என்றால் இது எவ்வளவு வேடிக்கையான விடயம்? இன்னும் 20 வருடத்தில், அல்லது 50வருடத்தில் மெற்றோ சிற்றி நடைமுறைப்படுத்தப்படும் என எவராலும் உறுதியாகச் சொல்ல முடியுமா? ஆக இதுவும் ஒரு உருப்படியான காரணமல்ல என்பது தெளிவு.

6. எதிர்காலத் திட்டமான மெற்றோசிற்றித் திட்டத்தில் இந்த வைத்தியசாலை இடம்பெயரும், எனவே அதை இப்போதே செய்திடலாம்.

இந்தக் கனவு கண்டு எழுந்து திட்டத்தையும் இடத்தையும் மாற்றும் வேலைத்திட்டத்தை; திட்டத்திற்கான கொடையாளிகள் ஒருநாளும் செய்யப்போவதில்லை. அது அறிவினமான திட்டமிடல் குறைபாடனா விடயம்.

7. கட்டப்படும் இதயசிகிச்சைத் தொகுதியை கொண்டு சென்றால் பின் ஏனையவற்றையும் கொண்டு செல்லலாம்.

ஒரு வேளை அதிஸ்டவசமாக அவர்கள் திட்டத்தை மாற்றி புதிய இடத்தில் கட்டினால், ஏனைய மருத்துவப் பிரிவுகள் எப்போது அங்கே கொண்டு செல்லப்படும் எனும் உறுதிப்பாடு உள்ளதா? அதுவரை ஏனைய பிரிவுகள், சேவைகள் இல்லாமல் எத்தனை ஆண்டுகள் அங்கும் இங்கும் பறந்து பறந்து சேவை மேற்கொள்ளமுடியும்,

அதற்கு ஆளணிகள் அவ்வளவு இலகுவில் கிட்டிவிடுமா? ஆக இதுவும் ஒரு நடைமுறைச்சிக்கல் உள்ள விடயம்.

ஆனால் புதிய இடத்தில் ஆரம்பத்தில் வைத்தியர் மற்றும் அலுவலகர்களுக்கான விடுதிகளை அமைக்கலாம், ஏனைய ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத சிகிச்சை நிலையங்களை கொண்டுசெல்லலாம்,

எதிர்காலத்தில் வரவிருக்கும் கருவிவசதிகள் வழங்கப்படாத கட்டிடங்களைக் கட்டலாம். முழுமையாக மாற்றப்படும் வசதி வரும்பொழுது அதனை முன்னெடுக்கலாமே ஒழிய அரை குறையாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைக்கழிக்க முடியாது.

இவை ஒருபுறமிருக்க, இந்தத் திடீர் இடமாற்றக் கோரிக்கையினை ஜய்க்கா எவ்வாறு அணுகும்?

பொதுவைத்தியசாலை வளாகத்தில் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் அமைப்பதற்கு ஒரு கருத்திட்டத்தின் முன்னான வேலைகள் அனைத்தையும் மிக நேர்த்தியாக நிறைவு செய்த ஜய்கா நிறுவனம், நாம் முதலிந்து புது இடத்தில் செய்யுங்கள் எனும்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு செய்யப்போவதில்லை.

திருகோணமலை வைத்தியசாலை இருதய சிகிச்சை  பிரிவு திட்டம். ஜப்பான் அரசின் நிதியில் ஜய்கா ( Jica) திட்டமாக 220 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் இதயம்

இது ஜய்காவும், அரசும் செய்த ஒப்பந்தத்திற்கு அமைவானது. அதன் பிரகாரம் ஜய்கா திட்டத்தை எக்காரணம்கொண்டும் பிறிதொரு இடத்திற்கு மாற்றச் சம்மதிக்காது. மாறாக இந்த நிதியை வேறொரு தேவைக்காகவும் வழங்காது.

அரசின் இடையூறு மற்றும் திட்டத்தைச் செய்யும் போது தோன்றும் முரண்பாடுகளால் அவர்கள் திட்டத்தை நிறுத்துவார்களே அன்றி, நாம் நினைத்து நினைத்துக் கேட்கும் இடங்களில் செய்ய மாட்டார்கள்.

ஆனால் இன்று புதுஇடம் பற்றிச் சிந்திக்கும் எமது புத்திஜீவீகள், துறைசார்ந்த நபர்கள் திட்டம் ஆரம்பிக்கும் போது என்ன மனநிலையில் இருந்தார்கள் என்பதற்குப் பதில் இருக்காது.

திருகோணமலையினை அபிவிருத்தி செய்ய கடந்த 50 ஆண்டுகளில் அரசு எந்த முன்னெடுப்பும் எடுத்ததில்லை, தொடங்கப்பட் அபிவித்தித் திட்டங்களும் இடைநடுவில் உள்ளது.

இங்கு மிக முக்கியமாக திருகோணமலை வாழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் எமக்கு வரும் வாய்ப்புகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையிலேயே இந்த cardiology unit.

ஆக இப்போதைய கேள்வி எமக்கு இந்த விசேட இதயசிகிச்சைப்பிரிவு தேவையா இல்லையா என்பதே!

தேவை எனின், அது எவ்வளவு காலம் இருக்கின்றது என்பதற்கு அப்பால் இருக்கும் வரை மக்கள் பயனடையும் வகையில் இருக்கவேண்டும். அது திருகோணமலை மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி வடக்கு கிழக்கு மக்களுக்கான ஒரு பெரும் வாய்ப்பு.

எனவே திட்டத்தைக் குழப்பாது திருகோணமலைப் பொது வைத்தியசாலை வளாகத்திலேயே கட்டித்தை அமைக்கத் திருகோணமலை வாழ்மக்கள், பொது அமைப்புகள், புத்திஜீவிகள் அரசிடமும், ஜய்க்கா நிறுவனத்திடமும் எம் அழுத்தமான கருத்தைப் பதிவு செய்யவேண்டும்.

உங்கள் கோரிக்கைகளை மக்கள் தனியாகவும் கூட்டாகவும் தெரிவிக்கலாம்.

ஜப்பான் நாட்டு (JICA) நிதியுதவியுடன் (220 கோடி) அமைக்கப்படவிருக்கும் இருதய சிகிச்சைப் பிரிவு திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு கீழே லிங்கை கிழிக் செய்து உங்களுடைய ஆதரவையும் வழங்குங்கள். திருகோணமலை வைத்தியசாலை இருதய சிகிச்சை  பிரிவு திட்டம். ஜப்பான் அரசின் நிதியில் ஜய்கா ( Jica) திட்டமாக 220 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் இதயம்

https://chng.it/MCzLt669

இல்லாவிட்டால் இந்த அரிய வாய்ப்பை திருகோணமலை மாவட்டம் இழக்கும் நிலை ஏற்படலாம்.

துஷ்யந்தன் கனா.
திருகோணமலை.