Home CRIME NEWS தனது குழந்தையை கடத்திச் சென்ற தேடப்பட்டு வந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

தனது குழந்தையை கடத்திச் சென்ற தேடப்பட்டு வந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

18

T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு, மனைவியின் தாயின் பாதுகாப்பில் இருந்த தனது குழந்தையை கடத்திச் சென்ற சந்தேகநபர், பொலிஸாருடனான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த உயிரிழந்த குறித்த சந்தேகநபர், ஹொரணை, இலிம்ப பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரகே தொன் நீலக சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியின் கை கால்களை கூரிய ஆயுதத்தால் வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று (16) இரவு பாட்டியிடம் இருந்த தனது மகனை அழைத்துச் செல்ல ஹொரணை, கந்தானை பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டிற்கு வந்துள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, சந்தேக நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்த பிரதேசவாசிகளை பயமுறுத்திய பின்னர் தனது குழந்தையை கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை தேடி பொலிசார் தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில், அங்குருவாதொட்ட, வல்பிட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொலிசார் குறித்த வீட்டைச் சுற்றி வளைத்ததாகவும், இதன்போது, சந்தேகநபர் வீட்டிற்குள் ஒழிந்திருந்து துப்பாக்கிச்சூடு நடாத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து T-56 வகை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது