Home CRIME NEWS கொடிகாமத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்.. இந்தியாவிலிருந்து கட்டளையிட்ட ஆவா ரௌடி… உடுவிலில் தாக்குதல்: விசாரணையில் வெளியான...

கொடிகாமத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்.. இந்தியாவிலிருந்து கட்டளையிட்ட ஆவா ரௌடி… உடுவிலில் தாக்குதல்: விசாரணையில் வெளியான தகவல்

33

கொடிகாமம் பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றே, சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ரெளடிகளால் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

அந்த மோட்டார் சைக்கிளை மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரையும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் ,அம்பலவாணர் வீதி பகுதியில், முதியவர் ஒருவர் தனித்திருந்த வீட்டுக்குள் புகுந்த ரௌடிகள் வன்முறையில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த வன்முறையில் ஈடுபட்ட 3 ரௌடிகளை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். ரௌடிகள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர். ஒரு மோட்டார் சைக்கிள் பற்றிய தகவல் வௌியாகியிருக்கவில்லை. மேலும் 3 ரௌடிகள் தலைமறைவாகினர்.

ஆவா குழுவிலிருந்துவிட்டு இந்தியாவிற்கு தப்பியோடிய ரௌடி ஒருவனே, இந்த தாக்குதலிற்கு கட்டளையிட்டதாக, கைதான ரௌடிகள் வாக்குமூலமளித்தனர்.

இதேவேளை, 3 மாதங்களின் முன்னர் கொடிகாமம் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டிருந்தது. 2 வாரங்களின் முன்னர் அந்த மோட்டார் சைக்கிள் கொடிகாமத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இதேவேளை, உடுவிலில் முதியவர் வீட்டில் வன்முறையில் ஈடுபட்டு, தலைமறைவான 3 ரௌடிகளும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் ஒரு மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை ஒரு வாரத்தில், மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மீண்டும் கைது செய்தனர்.

அந்த ரௌடியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கந்தரோடையை சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளையே கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

கந்தரோடை நபரை பொலிசார் விசாரணை நடத்தியபோது, அது தன்னுடைய மோட்டார் சைக்கிள் இல்லையென்றும், இந்தியாவிலுள்ள ஒருவரின் கட்டளைப்படி அந்த மோட்டார் சைக்கிளை ஒப்படைத்ததாக தெரிவித்தார்.

அந்த மோட்டார் சைக்கிளை கந்தரோடை நபரிடம் ஒப்படைத்தவர் கைதாகி, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியவரும் கைதானார்.

இறுதியாக கைதானவரே, கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர். அவர் கொடுத்த மோட்டார் சைக்கிளே பலர் ஊடாக ரௌடியின் கைக்கு சென்று, உடுவிலில் முதியவர் வீட்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கைதானவர்களும், மோட்டார் சைக்கிளும் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வருகிறது.