Home Local news இன்று ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம்! முக்கிய அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும்...

இன்று ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம்! முக்கிய அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ரணில்

14

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

முன்னதாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச்செல்வதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூம், அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டனர்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர பதவியேற்றிருந்தார்.

இதேவேளை, அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஏனைய அமைச்சர்கள் நாளைய தினத்திற்கு பின்னர் நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் விமல் வீரவங்ச மற்றும் அரசாங்கத்தின் ஏனைய பத்து சுயாதீன உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நேற்று விமல் மற்றும் அவரது தரப்பினருக்கு கலந்துரையாடலுக்கான நேரம் வழங்கப்பட்டது. எனினும் வேறு திகதியை வழங்குமாறு பிரதமர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நிதியமைச்சர் பதவியை பிரதமர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதியமைச்சராக அவர் பதவியேற்கவுள்ளார்.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவின் பெயர் கல்வி அமைச்சர் பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை 18 அமைச்சர்களைக் கொண்டிருக்கும் எனவும் பொதுஜன பெரமுனவுக்கு எட்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு ஐந்து அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மீதமாகவுள்ள அமைச்சுப் பதவிகள் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் அலுவலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.